இயல்பாக புன்னகைக்க...
பற்களில் குறைபாடு உள்ளவர்களால் நான்கு பேர் மத்தியில் சிரிக்கவே முடியாது. அதுவும் பற்களில் குறிப்பாக முன் பற்களில் பிரச்சினைகள் ஏற்பட்டால் இயல்பாக புன்னகைக்க முடியாது.
வசீகரமான புன்னகையை நாம் இழப்பதற்கான முக்கியக் காரணங்கள் பற்காரை, பற்சொத்தை, பற்கள் உடைதல், பற்களில் ஏற்படும் நிறமாற்றம், பற்கள் இல்லாத நிலை, தெற்றுப்பற்கள் போன்றவை ஆகும்.
இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டாலே நாம் அழகாக, வசீகரமாக புன்னகைக்க முடியும். ஆனால் இந்தப் பிரச்சினைகளுக்கு எப்படி தீர்வு காண்பது?
கீழ்க்கண்ட முறைகளில் தீர்க்கலாம்.
ஸ்கேலிங்
பற்காரையினாலோ, உணவுப் பொருட்களாலோ பற்களின் வெளிப்புறத்தில் நிறமாற்றம் ஏற்பட்டால் ஸ்கேலிங் மூலம் நீக்கிவிடலாம்.
வெனீரிங்
பல்லின் உட்புறத்தில் கறை காணப் பட்டால் அந்தப் பல்லின் வெளிப்பகுதியில் சிறிதளவு எனாமலை நீக்கிவிட்டு வெனீரிங் என்ற பல் மேற்புறப்பூச்சு செய்யலாம். ஆனால் இது ஒரு தற்காலிகமான முறை ஆகும்.
பல் நிற அடைப்பான்கள்
பற்களில் குறிப்பாக முன் பற்களில் சொத்தை ஏற்பட்டாலோ, விபத்தினால் பற்பகுதி உடைந்துவிட்டாலோ, பல்லில் சிறு இடத்தில் நிறமாற்றம் இருந்தாலோ, பற்களுக்கு இடையே இடைவெளி இருந்தாலோ காம்போசைட் என்ற பல் நிற அடைப்பான்களைக் கொண்டு அடைக்கலாம்.
செயற்கை பற்சிகரம்
பற்சொத்தை ஆழமாகிவிட்டாலோ, விபத்தினால் பற்பகுதி உடைந்து, நோய்த் தொற்றுதல் பற்கூழ்வரை சென்று இருந்தாலோ அந்த சூழ்நிலையில் இந்த அடைப்பான்களை பயன்படுத்த இயலாது. அப்போது அந்தப் பல்லில் வேர் சிகிச்சை செய்து செயற்கை பற்சிகரம் பொருத்தப்படும். பல்லில் உட்புறக் கரையிருந்தால் அப்போதும் இத்தகைய செயற்கை பற்சிகரத்தைப் பொருத்தலாம்.
பற்கள் இல்லாத சூழ்நிலையில் கீழ்க்கண்ட சிகிச்சை முறைகளை மேற் கொள்ளலாம்.
கழற்றி மாட்டக்கூடிய பற்கள்
இந்த வகை பல் செட்டுக்களை வாயில் ஒரு பல்கூட இல்லாதவர்களுக்கோ அல்லது பகுதியளவு பற்களை இழந்தவர்களுக்கோ பொருத்தலாம். ஆனால் இவை எப்போதும் அசவுகரியமாக இருப்பதோடு இவற்றை அடிக்கடி தூய்மைப் படுத்தவும் வேண்டியிருப்பதாலும் கைதவறி கீழே விழுந்து உடைந்துவிடும் வாய்ப்பு இருப்பதாலும் பெரும்பாலான மக்கள் இத்தகைய பல் செட்டுக்களை விரும்புவதில்லை.
நிரந்தரமாக பொருத்தக்கூடிய பல்செட்
இத்தகைய பல் செட்டுக்களை அவ்வப்போது கழற்றி தூய்மைப்படுத்த வேண்டுமென்ற அவசியமோ, உடைந்துவிடும் என்ற பயமோ தேவையில்லை. அது மட்டுமின்றி இவை இயற்கைப் பற்களைப் போலவே இருப்பதால் எந்த இடத்திலும் வாய்விட்டுச் சிரிக்கலாம். இத்தகைய பல்செட்டை பொருத்துவதற்கு அருகிலுள்ள இரு பற்களையும் ஆதாரமாக கொண்டு பொருத்துவார்கள்.
இம்ப்ளாண்ட்
இம்ப்ளாண்ட் என்பது தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அதிநவீன சிகிச்சை முறை. இந்த முறையில் தாடையில் இம்ப்ளாண்ட் ஆணிகளை பொருத்தி அதை அடிப்படையாகக் கொண்டு செயற்கைப் பற்களைக் கட்டுவார்கள். இதுவும் இயற்கைப்பற்களைப் போன்றே தோற்றமளிக்கும்.
கம்பி கட்டுதல்
பற்களுக்கு இடையே இடைவெளியிருந்தாலோ, பற்கள் வெளியில் துருத்திக்கொண்டிருந்தாலோ தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ கம்பி கட்டுதல் முறையில் தீர்வு காணலாம்.
ஈறு சிகிச்சை
பற்காரையினாலோ, மற்ற காரணங்களினாலோ ஈறுபகுதி வீக்கமாக காணப்பட்டால், ஜிஞ்€சுவெக்டமி என்ற ஈறு சிகிச்சையை செய்யலாம்.
தாடை அறுவைச் சிகிச்சை
சிறு உதடு இருந்தால் சிரிக்கும்போது ஈறுபகுதி வெளியே தெரிந்தாலோ, தாடை பெரியதாக வெளியே நீட்டிக் கொண்டிருந்தாலோ ஆஸ்டியோட்டமி என்ற தாடை அறுவைச் சிகிச்சை செய்யலாம்.
டிஸ்ட்ராக்ஷன்
பற்கள் ஒன்றையொன்று நெருக்கியடித்துக் கொண்டிருந்தால் முன்பெல்லாம் பற்களை எடுத்துவிட்டு கம்பி கட்டுவார்கள். தற்போது வந்துள்ள அதிநவீன டிஸ்ட்ராக்ஷன் முறையில் தாடையை நீளச் செய்து பிறகு பற்களை சீரமைக்கலாம்.
இவ்வாறே, மேல்தாடை உள்ளே சென்று கீழ்த்தாடை வெளியே நீட்டிக் கொண்டிருந்தாலும், தாடையை வளரச்செய்து சிகிச்சையளிக்கலாம்.
இந்த முறைகளை தகுதியான பல் மருத்துவரிடம் சென்று மேற்கொண்டால் சிரிக்கத் தடையே இருக்காது.
கருத்துகள்
கருத்துரையிடுக