சிரித்தாலும் நோய் வரும்

சிரித்தாலும் நோய் வரும்
! சிரிப்பு வந்தாலும் சிரிக்க முடியாத நிலையில் சில பெண்கள் இருப்பதேன்? இது என்ன வினோத நோய்?
சில பெண்களுக்கு சிரித்தாலோ, இருமினாலோ, தும்மினாலோ, சிறுநீர்க்கசிவு ஏற்படும். இதை மருத்துவ ரீதியாக, Stress Urinary Incontinence என்று கூறுவர். இதுவொரு வினோதமான நோய்தான். சிரித்தாலோ, இருமினாலோ, தும்மினாலோ, எடை தூக்கினாலோ வரும் சிறுநீர் கசிவை பற்றி தங்கள் பெற்றோரிடமோ, கணவன்மார்களிடமோ கூட இதைப்பற்றி பேச கூச்சப்படுகிறார்கள். வீட்டில் நடக்கும் சுப காரியங்களில் கூட கலந்து கொள்வதில்லை. வெளியில் சென்றால் சிறுநீர்க்கசிவு ஏற்பட்டு, சிறுநீர் வாடை அடித்து விடுமோ என்று கவலைக்கு உள்ளாகிறார்கள்.

வீட்டில் உள்ளவர்களிடத்திலேயே இத்தகைய பிரச்சினைகளைப் பற்றிப் பேசாத பெண்கள் மருத்துவர்களிடத்தும் வருவதில்லை. மேலும் தங்கள் வீட்டில் உள்ள வயது முதிர்ந்த பெண்களிடம் பேசி, அவர்கள் இதை வயது முதிர்ச்சியால் வருவது, இதற்கு ஒன்றும் செய்ய இயலாது என்று கூறிவிடுவதால் இதை அப்படியே விட்டு விடுகின்றனர். வீட்டு வேலை செய்யும் பெண்களைக் காட்டிலும், வெளியில் பணிபுரியும் பெண்கள்தான் அதிகம் இதனால் மனரீதியில், உடல் ரீதியில் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், இப்போது இந்நிலை மாறிவிட்டது. அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளில்தான் இதற்கான சிகிச்சை அளிக்கப்படும் என்ற நிலைமை மாறி இங்கேயும் இதற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
! இந்த விநோத நோய் எத்தகைய பெண்களுக்கு வரும்?
இந்த நோய் சுகப்பிரசவமான பெண்களுக்கு, அடுத்து வயது முதிர்ச்சியானவர்களுக்கு, ஆஸ்துமா, மலச்சிக்கல் உள்ள பெண்களுக்கு, 35 வயதிற்கு மேலானவர்களுக்கு, குண்டான பெண்களுக்கு, மெனோபாஸ் பிரச்சினை உள்ளவர்களுக்கு, கருப்பை அகற்றப்பட்டவர்களுக்கு, சிறுநீர் பையில் துவாரம் ஏற்பட்டவர்களுக்கும் வர வாய்ப்பு உண்டு. இவர்களுக்கு எல்லாம் கட்டாயம் வரும் என்பதில்லை.
! இந்த நோயின் வெளிப்படையான அறிகுறிகள் எப்படியிருக்கும்?
இருமினால், தும்மினால், சிரித்தால் சிறுநீர் கசியும். மேலும் சிலருக்கு சிறுநீரை அடக்க முடியாமல் பாத்ரூமிற்குள் நுழைவதற்குள் அவசர அவசரமாக வந்துவிடும்.
! பெண்களுக்கு கட்டுப்பாடற்ற முறையில் சிறுநீர் கசிய என்ன காரணம்?
பெண்களின் இடுப்பு பகுதியில் இருக்கின்ற அடித்தளத்து தசைகள் சிறுநீர் குழாயினையும், சிறுநீர் பாதையினையும் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கின்றன. இந்த அடித்தள தசைகள் Urethra என்கிற சிறுநீர் குழாயினை வலுவாக, மிக சரியாக தாங்கிப் பிடித்து வைத்திருக்கும். சில பெண்களுக்கு இடுப்பு பகுதியில் இருக்கின்ற அடித்தளத்து தசைகள் தளர்ச்சியோ, பலவீனமோ அடைகின்ற பொழுது பெண்களுக்கு இருமினால், பலமான பொருட்களை தூக்கினால், சிரித்தால் அவர்களையும் அறியாமல் சிறுநீர் கசிந்துவிடும். ஆக கட்டுப்படுத்த முடியாத சிறுநீர் கசிவிற்கு முதல் காரணமாக இருப்பது தசைகளின் தளர்ச்சியே.
அடுத்து-சிறுநீர் (Urethra) குழாயினை Spinchter என்கிற தசைகள் பாது- காப்புடன் சிறுநீரை நாமாக வெளியேற்றும் வரையில் இறுக்கமாக மூடியே வைத்திருக்கும். நாம் சிறுநீர் போகும்போது இந்த தசைகள் தளர்ந்து சிறுநீரை வெளியேற்றும். ஆனால் இந்த Spinchter தசைகள் சில பெண்மணிக்கு ஒழுங்காக, முறையாக செயல்படாமல் போகும். இதனால்கூட கட்டுப்படுத்த முடியாமல் சிறுநீர் கசியலாம்.
! என்னென்ன சோதனைகள் செய்து இந்த பாதிப்பின் தீவிரத்தை அறிவீர்கள்?
சிறுநீர் டெஸ்ட் செய்து கிருமி தொற்று இருக்கிறதா என்று பார்ப்போம்.
சிறுநீர் பை ஸ்கேன் செய்வோம்.
சிஸ்டஸ்கோபி (Cystoscopy) மூலம் (Urine Culture test) சிறுநீர்ப் பையின் உட்புறத்தை டெலெஸ் கோப் மூலம் சிறுநீர் பையை ஆராய்ந்து கற்களோ அல்லது காசநோய் கேன்ஸர் இருக்கிறதா என்று பார்ப்போம். மேலும் யூரோ டைமனமிக்ஸ் (Uro Dynamics) என்னும் சோதனை முறையில் சிறுநீர் பையின் தன்மை, அதன் வடிவம், செயல்பாடு போன்றவற்றையும் சோதனையிட வேண்டியிருக்கும்.
! சிரித்தால், இருமினால் வருகிற துன்பத்திற்கு என்ன நவீன சிகிச்சை?
பிரச்சினையின் தீவிரம் பொருத்து சிகிச்சை மாறுபடும். ஆரம்ப நிலை என்றால் Pelvic floor exercise (தசைப் பயிற்சி) கற்பிக்கப்படும். அடுத்து Bio Feed bact யோனிக் குழாயில் அல்லது மலக்குழாயில் F.E.S என்கிற Functional Electrical Stimulation எனும் முறையில் பாதிப்பை குணப்படுத்தலாம். எனினும்- இதனை வாழ்நாள் முழுதும் மேற்கொள்ள வேண்டியிருக்கும். இதை எல்லாம் தவிர்த்து நிரந்தர தீர்வு வேண்டும் என்றால்- Sling operation என்கிற அறுவை சிகிச்சை மூலம் குணம் பெறலாம்.
இந்த ஆபரேஷனை செய்துகொண்டு உடனே வீட்டுக்குச் சென்று விடலாம். இந்த சிகிச்சைக்கு பதிலாக இன்னொரு முறையில் லேப்ராஸ்கோபிக் மூலம் Laproscope Burch ஆபரேஷனும் செய்து கொள்ளலாம். இச்சிகிச்சையும் நிரந்தர தீர்வாகும். இப்பிரச்சினையை வயதானால் வருகிற சாதாரண பிரச்சினை என்று நினைத்துக் கொண்டு மன உளைச்சல் அடையாமல் டாக்டரிடம் சென்று பார்ப்பது நல்லது.
! இந்த பெண்களுக்கான சிறுநீர் பிரச்சினை அந்த காலத்திலிருந்தே இருந்து வந்ததுதானே? இப்போது புதிதாக வந்துள்ளதா?
சிரித்தால், இருமினால், தும்மினால், அதிக எடை உள்ள பொருட்களை தூக்கினால் பெண்களுக்கு சிறுநீர் கசிவது அல்லது கட்டுபாடற்ற சிறுநீர் கசிவு என்பது பெண்களுக்கு பல நூற்றாண்டுகளாக உள்ள பிரச்சினைதான். ஆனால் பெண்களின் வினோத -இந்த மாதிரியான நோய்க்கு எந்த வகையான சிகிச்சையும் மிக மிக அண்மைக் காலம் வரை இல் லாமலிருந்தது. இப்போது இந்த பெண் நோயை குணப்படுத்த தமிழகத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய மருத்துவ நிபுணர்களே உள்ளனர். மேலும் இந்த வினோத நோயினை பற்றி பெண்களுக்கு வரும் பல வகையான நோய்களை குணப்படுத்தும் பல மருத்துவர்களுக்கே தெரிவதில்லை என்பதுதான் உண்மை. எனவே அந்த மருத்துவர்கள் பெண்களிடம் இதுபோன்ற பிரச்சினையைப் பற்றி எதுவுமே குறிப்பிடுவதில்லை. உலகம் முழுதும் உள்ள 40 சதவீதம் பெண்களுக்கு இந்த பிரச்சினை இன்றைய நாளில் உள்ளது என்றால் நீங்கள் நம்புவீர்களா?
இந்த பிரச்சினை ஒன்றும் உயிர் போகிற உடல் நலக் குறைபாடு இல்லை தான். எனினும் வெளி உலகத்திற்கு சகஜமாக போக முடியாமல் சந்தோஷ மாக சிரித்து மகிழ முடியாமல், மனசுக்குள் புழுங்க வைக்கும் இத்தகைய நோயுடன் வாழ்நாள் முழுதும் வாழத் தான் வேண்டுமா? பெண்கள் இன்றைய நாளில் குடும்பத்தை, குழந்தைகளை காப்பாற்ற தினமும் வீட்டை விட்டு வெளியே வந்து அரக்க பரக்க உழைத்து முன்னேற வேண்டிய நிலைமையில்தான் உள்ளார்கள். இவ்வாறு குடும்பத் திற்குள்ளும் வெளி உலகத்திலும் உழைக்க வேண்டிய கட்டாயத்திலிருக்கிற பெண்கள்... இது மாதிரியான சங்கடம் தருகிற நோய்களையும் சுமந்து கொண்டு திரியத்தான் வேண்டுமா? யோசியுங்கள்.
இந்த குறைபாட்டை மறுபடியும் வரவிடாமல் செய்கிற அதிநவீன சிகிச்சைகள் வந்து விட்டன. இதுபோன்ற பெண்களின் சிறுநீரக மற்றும் சிறுநீர் பிரச்சினைகளை குணப்படுத்துவதற்கென்றே யூரோ கேனாகாலஜி என்கிற நவீன மருத்துவதுறை வந்துள்ளது என்பது மக்கள் அறிய வேண்டிய ஒன்றாகும்.

கருத்துகள்