நெஞ்சுவலியை அலட்சியப்படுத்தாதீர்கள்!

நெஞ்சுவலியை அலட்சியப்படுத்தாதீர்கள்!
சிலருக்குத் திடீரென்று நெஞ்சு வலி வரும். வேலை செய்யும்போது, பளு தூக்கும்போது, வேகமாக நடக்கும்போது, உணவு உண்ட பின்பு இப்படி அடிக்கடி வலி தோன்றும். அநேகம் பேர் இதை வாயுத் தொல்லை என்று அவர்களாகவே ஏதோ காரணங்களைக் கூறி அலட்சியம் செய்து விடுகின்றனர்.

பொதுவாக மார்பு வலி, மாரடைப்பு ஏற்பட பல காரணங்கள் உள்ளன. குறிப்பாக இருதய இயங்குவதற்கு பிராண வாயு தேவை. கரோனரி என்ற ரத்தக் குழாய் இருதயத்திற்கு ரத்தத்தையும், பிராண வாயுவையும் கொடுக்கிறது. இந்த நிலையில் இதயத்துக்குத் தேவையான அளவு பிராண வாயு கிடைக்கவில்லை எனில் நெஞ்சுவலி ஏற்படும். அதே நேரத்தில் ரத்தக்குழாய் உள்சுவர்களில் கெட்ட கொழுப்பு முழுமையாக அடைத்தாலும் மாரடைப்பு வரும். இப்பிரச்சனை தற்காலத்தில் 20 வயது முதல் 70 வயதுள்ளவர்களுக்கு வருகிறது.
மார்பு வலி, மாரடைப்புக்குக் காரணமான கரோனரி இரத்தக் குழாயின் அடைப்பினைக் கண்டறிய பல பரிசோதனைகள் உள்ளன. இதில் மிகவும் முக்கியமான பரிசோதனை. கரோனரி ஆஞ்சியோகிராம் (Coronary angiogram) என்ற உள் ஆராய்வு பரிசோதனை. இந்தப் பரிசோதனைதான் எல்லா மார்பு வலி, மாரடைப்பையும் கண்டறிய உதவுகிறது.
இந்தப் பரிசோதனையில் எந்தக் குழாயில் எவ்வளவு அடைப்பு என்ற விவரங்கள் தெரிந்து விடும். இரத்தக் குழாயில் ஓர் அடைப்பா? அல்லது மூன்றா, நான்கா என்ற விவரங்கள் தெரிந்தபின்பு தான் பைபாஸ் அறுவை சிகிச்சையா? அல்லது பலூன் ஸ்டெண்ட் மூலம் அடைப்பினை நீக்கலாமா என்ற முடிவிற்கு வர முடியும்.
ஒன்றிரண்டு அடைப்பு இருந்து, இளைஞராக இருந்தால் ஆபரேஷனைத் தவிர்த்து பலூன் ஸ்டெண்ட் மூலம் இந்த அடைப்பினை நீக்கி விடலாம்.
இந்த சிகிச்சை முறையில் பலூனின் மேல் பால் பாயிண்ட் பென்சில் ஸ்பிரிங் போன்ற ஸ்டெண்டை வைத்து இதை கரோனரி இரத்தக் குழாயின் உள்ளே செலுத்த வேண்டும். பிறகு அடைப்பு உள்ள பகுதியில் இந்த ஸ்டென்டை பொருத்திவிட்டு பலூனை வெளியே எடுத்து விட வேண்டும். இதுதான் பலூன் ஸ்டெண்ட் (Balloon stent) சிகிச்சை எனப்படுவது. இந்தச் சிகிச்சை தற்போது இந்தியாவில் காஸ்ட்லியாகக் காணப்பட்டாலும் இன்று பரவலாக உபயோகிக்கப்படுகிறது. மேலும் தற்போது இந்தச் சிகிச்சை முறையில் பல அரிய மாற்றங்களும் வந்துள்ளன.
நெஞ்சு வலியை அலட்சியப்படுத்தாமல் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் பல நோய்களை மருந்து, மாத்திரைகள் மூலமே கட்டுக்குள் கொண்டு வரமுடியும்.

நன்றி: மங்கையர் மலர்

கருத்துகள்