குழந்தை ஏன் அழுகிறது ?


குழந்தை ஏன் அழுகிறது ?
நீங்கள் பார்த்து பார்த்து உபசாரம் செய்தாலும் குழந்தை வீலென்று அழவே செய்யும். அது எதற்காக அழுகிறது என்று உங்களுக்குக் காரணம் புரியாது. எரிச்சல்தான் வரும். சனியனே, எதுக்கு அழறே? என்று சத்தம் போடுவீர்கள். ஒன்றைப் புரிந்கொள்ளுங்கள். உங்கள் அதட்டலுக்கோ, சின்னதாய் நீங்கள் கொடுக்கிற அடி உதைக்கோ குழந்தை பயந்துவிடாது, உங்களுடைய கணவர் சொல்வார், அதுக்கு பசிக்கிறதோ, என்னவோ என்று.


குழந்தை பசித்தால் மட்டும் அழுவதில்லை. தனக்கு எந்த மாதிரி அசௌகரியம் ஏற்பட்டாலும் அது அழும். அழுகையில்தான் அது தனது அதிருப்தியை வெளிப்படுத்தும். ஹாலில் கேட்கிற சத்தம், கண்ணைக் கூசுகிற விளக்கு வெளிச்சம், சூழ்நிலை மாற்றம் இப்படி குழந்தை அழுவதற்கு எத்தனையோ சந்தர்ப்பங்கள்.
குழந்தை, பிறந்த சில வாரங்களுக்கு உங்களிடம் இருந்து பிரத்யேகக் கவனத்தை எதிர்பார்க்கும். உங்கள் அருகாமை அதற்குத் தேவைப்படும்போதெல்லாம் அழும். உங்களுடைய அரவணைப்பில்தான் பாதுகாப்பை அது உணர்கிறது.
நாளாவட்டத்தில் அழுகை குறையும். க்கா, ... ங்கா என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும்.
குழந்தை பசியில் அழும். அழும்போதே காற்றை விழுங்கிவிடும். அதனால் வயிறு நிரம்பி, களைப்பில் தூங்கிவிடும். மீண்டும் விழிக்கும் போது பசி எடுத்து அழும்.
இதுக்கு எப்போ பசிக்கும்னே தெரியலை என்று முணுமுணுப்பீர்கள்.
ஒருமுறை பசியாறிய குழந்தை அடுத்து எவ்வளவு நேரம் கழித்து அழுகிறது என்பதைக் கவனியுங்கள். குழந்தை அழுது சோரும்படி விட்டால் என்னவாகும்? உங்களுக்கே தெரியும். உடனுக்குடன் அதன் தேவையை தீர்த்து வையுங்கள். பிறகு அது அடிக்கடி அழாது.
குழந்தை மலம் கழிக்க அழும். தான் ஈரப்படுத்திய துணியை மீண்டும் ஈரப்படுத்த விரும்பாமல் அழும். அவ்வப்போது புதிதாய் துணி மாற்ற வேண்டும்.
அறையின் வெப்பம் அல்லது குளிர் தாங்காமலும் குழந்தை அழும். அதேபோல் உடம்பின் சூடு அல்லது சில்லிப்பும், வயிறு முட்ட பால் குடித்திருந்தால் உடம்பு சீக்கிரமே சூடாகிவிடும். வெறும் வயிற்றோடு கிடந்தால் உடம்பு வெடவெடக்கும். குழந்தை உருண்டு, புரண்டு, தவழ்ந்து சுறுசுறுப்பாக செயல்படும்போதும் உடம்பு சூடாகும். குழந்தையின் கழுத்து அல்லது முதுகைத் தொட்டுப் பார்த்தால் தெரியும். அதன் கால், கைகளை தொட்டுப் பார்க்க வேண்டாம். அவை எப்போதுமே சில்லென்றுதான் இருக்கும்.
குழந்தையை நீங்கள் எடுத்துக் கொண்டிருந்தால் கொஞ்ச நேரம் இடுப்பில் அல்லது மடியில் விட்டு வையுங்கள். உடனே, தொட்டிலில் போடுவதை அது விரும்புவதில்லை.
வளர்ந்த குழந்தைகள் படுக்கை நேரத்தில் அழுவதற்குப் பல காரணங்கள் உண்டு. தூங்கிய பின் விழித்தெழுவதே அதற்கு விநோதமான விஷயம். அது புதுப்புது இயக்கங்களில் திருப்தி அடைகிறது. (உ - ம் நிற்பது, நடப்பது, பொருள்களைக் கையில் பற்றுவது).
அடுத்தவர்களுடன் கலந்து பழகும் போது அது பேசும், சிரிக்கும்.
குழந்தைக்கு உறங்கும்போது இதமான வெளிச்சம் வேண்டி இருக்கும். கதவை மூடி வைப்பது கட்டோடு பிடிக்காது. தனித்து இருப்பதும் ஆகாது. இனம் தெரியாத பயம் வந்துவிடும்.
பல் முளைக்கும்போது ஈறுகளில் நமைச்சல் இருக்கும். லேசான வலி தெரியும். அதனை அழுகையில் வெளிப்படுத்தும். படுக்கை நேரத்தில்தான் அது அந்த உபாதையை உணர்கிறது.
குழந்தையை விளையாடும்படி நீங்கள் தூண்ட வேண்டியதில்லை. அதற்கேற்ற அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்தால் போதும், தன்பாட்டுக்கு விளையாடி மகிழும்.
நீங்கள் குழந்தையோடு விளையாட விரும்பும் நேரத்தில் அது அழுதுவைக்கும். உங்களுக்கோ எரிச்சல் பற்றிக் கொண்டு வரும். உண்மையில் குழந்தைக்கு உறக்கம் தேவைப்படும் நேரமாக அது இருக்கலாம்.
ஆறுமாத வளர்ச்சிக்குப் பிறகு அது மனிதர்களை அடையாளம் கண்டுகொள்கிறது. தனக்குப் பிடித்த முகங்களைக் கண்டால் மகிழ்வை வெளிப்படுத்தும். தூக்கத்தில் இருந்து விழிக்கும்போது அந்நிய முகம் தன்னை நோக்கி குனிந்தால் அழுது வைக்கும்.
தனிமையில் தூங்குவதைவிட, உங்கள் தாலாட்டை கேட்டபடி அல்லது உங்கள் தோளில் சாய்ந்தபடி உறங்குவது குழந்தைக்குப் பிடிக்கும். அதற்குத்தான் கண்ணும், காதும் நன்கு செயல்பட ஆரம்பித்து விட்டதே.
களைத்துப் போகும் குழந்தை அழும். சோர்ந்த நிலையில் அது பொறுமை இழந்துவிடுவதே காரணம். ஏதாவது சிறு சங்கடங்கள் ஏற்பட்டாலோ, அது நினைத்த விதத்தில் பொம்மைகள் இயங்காவிடிலோ அதற்குக் கோபம் வந்துவிடும். தனது கையில் இருக்கிற பொம்மை அல்லது பொருளை நீங்கள் விளையாட்டாகப் பிடுங்கினாலும் அழும்.
நீங்கள் எத்தனைக்கெத்தனை பரிவு காட்டி அதன் தேவைகளைத் தீர்த்து வைக்க உடனுக்குடன் அணுகுகிறீர்களோ, அத்தனைக்கு அதன் அழுகை குறையும். திருப்தி அடையும். மகிழ்ச்சியை வெளிப்படுத்தும். அழுவதைவிட சிரிப்பதே ஆரோக்கியமான காரியம் என்று குழந்தைக்குப் புரியும்போது உங்கள் பிரச்சினைகள் இலேசாகிவிடும்.


கருத்துகள்