வயிற்றுப்போக்கு கவனிக்காவிட்டால்...!

வயிற்றுப்போக்கு கவனிக்காவிட்டால்...!
வயிற்றுப்போக்கு வந்துவிட்டால் எவ்வளவு ஆரோக்கியமான குழந்தைகள் என்றாலும் தளர்ந்து போகும். தொடக்கத்தில் இதற்கு வீட்டு சிகிச்சை கைகொடுக்கும் என்றாலும், நோய் தீவிரமாகிவிட்டால் அது உயிருக்கே ஆபத்தாகிவிடும். சுகாதாரமற்ற உணவு, சுகாதாரமற்ற தண்­ணீர், வைரஸ் பாதிப்பு போன்றவைகளால் வயிற்றுப்போக்கு உருவாகிறது. திறந்திருக்கும் உணவில் ஈ போன்றவை உட்காரும்போது அதனால் ஏற்படும் அசுத்தத்தால் வயிற்றுப்போக்கு தோன்றும். சில குழந்தைகளுக்கு பால் பருகுவதால் ஏற்படும் அலர்ஜி, கடை உணவுகள் சாப்பிடும் போது ஏற்படும் வயிற்றுப் பாதிப்பும் வயிற்றுபோக்காக மாறும். சில நோய்களின் அறிகுறியாகவும் வயிற்றுப்போக்கு காணப்படுகிறது.

வீட்டில் சிகிச்சை:
சிறிய அளவில் வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், வீட்டு சிகிச்சையிலே அதை சரி செய்திட முடியும். "ஓ.ஆர்.எஸ்" திரவத்தையோ, உப்பு சேர்த்த கஞ்சி நீரையோ அடிக்கடி கொடுக்கவேண்டும். இளநீரும் கொடுக்கலாம். அரிசி வகை உணவுகள் விரைவாக ஜீரணமாகும் என்பதால் தோசை, இட்லி போன்றவைகளையும் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். கோதுமை- பொடி அரிசி கஞ்சி, சூப் போன்றவைகளும் கொடுக்கலாம். கைக்குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு இருந்தால் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். வாந்தியும் இருந்தால் கொதித்து ஆற வைத்த நீரைப் பருகக் கொடுக்க வேண்டும். அப்போது பருகுவதற்கு ஜூஸ் கொடுக்கக்கூடாது.
சோர்வை நீக்க:
வயிற்றுப்போக்கு தொடரும்போது குழந்தைகளுக்கு சோர்வு தோன்றும். அப்போது வாந்தியும் ஏற்பட்டால் சோர்வு அதிகரிக்கும். "ஓ.ஆர்.எஸ்" திரவம் சோர்வை நீக்கவும் பயன்படும். நீண்ட நாட்கள் வயிற்றுப்போக்கு இருந்துகொண்டிருந்தால், குழந்தைகளின் உடல் எடை குறையத் தொடங்கும். வயிற்றுப்போக்கு நின்ற பிறகு அவைகளுக்கு பசி அதிகரிக்கும். அதற்குத் தக்கபடி உணவு கொடுக்கத் தொடங்கினால் உடல் எடை அதிகரித்துவிடும்.
"ஓ.ஆர்.எஸ்" திரவம் கொடுக்கும் நிலை ஏற்பட்டால், மெடிக்கல் ஷாப்களில் பாக்கெட்டுகளில் கிடைக்கும் தரமானவற்றை மட்டுமே வாங்கிப் பயன்படுத்த வேண்டும். ஒரு பாக்கெட்டைத் திறந்து விட்டால் அதை 24 மணிநேரத்துக்கு மேல் பயன்படுத்தக்கூடாது. குழந்தைகளுக்கு ஒரே நேரத்தில் ஒரு கப் நிறைய பருக கொடுக்கக்கூடாது. ஒரு கப் திரவத்தை மூன்று அல்லது நான்கு தடவையாக கொடுக்க வேண்டும். ஆனால் வீட்டு சிகிச்சை மூலமாக மட்டுமே வயிற்றுப்போக்கைக் குணப்படுத்த முடியாது. பாதிப்பு அதிகரிப்பதாகத் தெரிந்தால், உடனடியாக ஆஸ்பத்திரி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
கீழ்கண்ட அறிகுறிகள் இருந்தால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுவிட வேண்டிய நிர்பந்தம்:
* குழந்தைக்கு தளர்ச்சி தோன்றினால்.
* குழந்தையின் வாய் வறண்டு, உலர்ந்துபோனால்
* சிறுநீர் கழிக்கும் தடவை குறைந்துபோனால்
* சருமத்தின் நெகிழ்வுத்தன்மை குறைந்தால்
* நிறுத்தாமல் அழுவது, அழும்போது கண்ணீ­ர் வராமல் இருப்பது
* மலத்தில் ரத்தமும், சளியும் வெளியேறுதல்
* வயிற்றுப்போக்கோடு கடுமையான காய்ச்சல் ஏற்படுதல்
* வயிறு வீங்கிப்போதல்
* அடிக்கடி மலம் வெளியேறுதல்
சிறிய அளவிலான வயிற்றுப்போக்கு என்றாலும், ஒரு வாரத்திற்கு மேல் நீண்டு போகுதல்.
வயிற்றுப்போக்கு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை:
* கைக் குழந்தைகளுக்கு முடிந்த அளவு தாய்ப்பால் மட்டுமே கொடுங்கள். அதுதான் பாதுகாப்பானது.
* பால் பொடியை கலக்கி கொடுக்க பயன்படுத்தும் நீர், நன்கு கொதித்ததாக இருக்க வேண்டும்.
* பாதி அளவு பாட்டில் பாலை பருகிவிட்டு, மீதியை அடுத்த நேரத்திற்கு வைத்து கொடுக்கக்கூடாது.
* குழந்தைகளுக்கான உணவு தயாரிக்கும் பாத்திரங்கள், வென்னீரில் நன்றாகக் கழுவப்பட வேண்டும்.
* குழந்தைகளுக்கு உணவு கொடுப்பதற்கு முன்னதாக உணவு ஊட்டுபவர்கள் தங்கள் கைகளை நன்றாகக் கழுவி சுத்தம் செய்துகொள்ள வேண்டும்.
* குழந்தைகளுக்குக் கொதித்து ஆறிய நீரை மட்டுமே பருகக் கொடுக்க வேண்டும்.
* பள்ளிக்குச் செல்லும் சிறுவர்-சிறுமியர்களை பள்ளி அருகில் உள்ள கடைகளில் எந்த உணவும் வாங்கி சாப்பிட ஊக்குவிக்கக்கூடாது.
* அவ்வப்போது தயாரிக்கும் உணவுகளை மட்டும் குழந்தைகளுக்கு சாப்பிட அனுமதியுங்கள்.
* உணவு சாப்பிடும் முன்பு கைகளை கழுவி சுத்தம் செய்யும் பழக்கத்தை குழந்தைகளிடம் உருவாக்குங்கள்.

கருத்துகள்

கருத்துரையிடுக