சனி, 7 பிப்ரவரி, 2015

விடலைப் பருவத்து பிரசினைகள்

விடலைப் பருவத்து பிரசினைகள்
பதினாறு வயதில் பெண்களுக்கு ஏற்படும் கவலைகள் அதிகம். குட்டையான பெண்கள், தான் உயரமாக இல்லை மிகவும் குள்ளம் என்பது எப்போதும் அவர்களின் மனதில் உறுத்திக் கொண்டேயிருக்கும் விஷயம். அடுத்தது முகப்பருக்கள். நாளடைவில் கவலைகளில் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வந்து அவளைப்பற்றிய ஒரு தாழ்ந்த சுயமதிப்பீட்டுக்கு அவள் ஆளாகிறாள். இது மனச்சோர்வை ஏற்படுத்துகிறது. விளைவு, படிப்பில் நாட்டம் குறைந்து, தனிமையை விரும்பி மற்றவர்களிடமிருந்து விலகியிருக்கத் தொடங்குகிறார்கள். இதுவே பெண்களின் பெரிய பிரச்சினையாகும்.
விடலைப் பருவத்திலிருப்பவர்களின் பிரச்னைகள் என்று வந்தால் ...
வளரும் பருவம், வாழ்க்கையில் மகிழ்ச்சியும் பரவசமும் ஏற்படும் காலம். அத்துடன் உடல் ரீதியாக பல மாற்றங்கள் ஏற்படும் காலமும் கூட. இதனால் அவர்கள் பார்க்கும் பார்வை, அனுபவிக்கும் உணர்வுகள், எண்ணங்கள் எல்லாவற்றிலுமே ஒரு மாற்றம் காணப்படும். குறிப்பாக இந்த வயதில் தங்கள் உடலில் ஏற்படும் சில மாற்றங்களைக் கண்டு பெரும்பாலும் கூச்சப்படுகிறார்கள். சிறிது தயக்கமும் அடைகிறார்கள். முகப்பரு, மாதவிடாய் பிரசினைகள், களைப்பு, பூப்படைதல், உடல் பருமன், நடத்தை, உடலியல் ரீதியான மாற்றங்கள் போன்ற விஷயங்களில் ஏராளமான சந்தேகங்கள் குவிந்துவிடுகின்றன. பாலியல் உட்பட எதைப்பற்றி வேண்டுமானாலும் தயக்கமில்லாமல் பேசுவதற்கு ஒரு விசேஷ வழிகாட்டியின் உதவி தேவைப்படும் பருவம் இது. அந்த விசேஷ வழிகாட்டி இல்லாதபோது குழப்பங்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் சிக்கல்களைக் கொண்டு வந்து சேர்க்கிறது. குறுக்கு வழியில் பணம் பறிக்க ஆசைப்படும் சில போலி மருத்துவர்கள் தரும் தவறான விளம்பரங்கள் பிரச்னையை மேலும் சிக்கலாக்கி விடுகின்றன.
விடலைப் பருவத்தில் ஏற்படும் மாற்றங்களைத் தெளிவாகத் தெரிந்து கொண்டு, தங்களுடைய உடல்நலப் பராமரிப்புக்குத் தேவையான பொறுப்பையும் வழிமுறைகளையும் சுயமாக வளர்த்துக் கொள்ளும் போது பிரசினைகளைச் சுலபமாகத் தவிர்த்துவிட முடியும்.
குறைவாக சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான சக்தி கிடைக்காமல் ரத்தசோகை. தாழ்வு மனப்பான்மை, படிப்பில் பின்னடைவு, அதிகப்படியான சோர்வு, மன அழுத்தம், தனிமையை விரும்புதல், சாப்பாட்டில் சமச்சீரின்மை ஆகியவற்றுக்கு அவர்கள் ஆளாகிறார்கள். உடல் மட்டும் ஒரு மனிதனுக்கு முக்கியமில்லை. அறிவு, கடும் உழைப்பு, விடாமுயற்சி போன்றவையும் முக்கியம் என புரியவைக்க வேண்டும்.
அழகு என்பது நம்மிடம் இல்லை. பார்ப்பவர்களின் கண்ணில் தான் இருக்கிறது. ஒருவருக்கு அழகற்றதாகத் தெரியும் ஒருவர், இன்னொருவருக்கு அழகாய்த் தெரிவதற்கான காரணத்தை விளக்க வேண்டும்.
உயரமாக இல்லை, குள்ளமாக இருக்கிறோம் என்ற கவலை அவர்களே வரவழைத்துக் கொண்ட கவலைதான். உயரம் குறைவாக இருப்பதற்கு மரபுரீதியாக, உணவு பற்றாக்குறையால், ஹார்மோன் கோளாறுகளால்... இப்படி பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால் தள்ளிப்போகும் வளர்ச்சி என்று சிலருக்கு ஆகும். சில வருடங்களுக்குப் பிறகு வேகமாக வளர்ந்து சராசரி உயரத்தை அவர்கள் அடைந்து விடுவார்கள். ஆனால் இது தெரியாததால், மனக் குழப்பங்களுக்கு ஆளாகிறார்கள். மனச் சோர்வும் ஏற்படுகிறது.
பருவ வயதில் உடலில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி அவர்களுக்குத் தெளிவு ஏற்படும் வண்ணம் பெற்றோர்கள் பேச வேண்டும். பேச கூச்சமுள்ள பெற்றோர்கள். இது தொடர்பான புத்தகங்களை அவர்களுக்கு படிக்கத் தரலாம். சுற்றுச்சூழல் பழக்கவழக்கங்கள், சமூக, கலாசார மாறுதல்கள், உடல் மாற்றங்கள் போன்ற விஷயங்கள் பற்றி பெற்றோர்கள் குழந்தைகளுடன் சுதந்திரமாக பேச வேண்டும். இதற்கு பெரும்பாலான பெற்றோர்கள் கூச்சம் அடைகிறார்கள் அல்லது தயங்குகிறார்கள். நாமும் நம் பருவத்தில் பாதி நேரம் கண்ணாடிக்கு முன் நின்று, நம்மை நாமே ரசிப்பதிலேயே செலவிட்டவர்கள்தானே என்ற உண்மையே நினைத்துக் கொண்டாலே போதும் தயக்கம் விலகிவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக