குழந்தைகளுக்கு முன்மாதிரியா இருங்க!

குழந்தைகளுக்கு முன்மாதிரியா இருங்க!
குழந்தைகள் விரக்தி, கோபம் அல்லது ஏமாற்றம், எரிச்சல் இவற்றை அனுபவிக்கும்போது அவர்கள் அழுதல், கத்துதல், பொருட்களை உடைத்தல், தரையில் உருளுதல், சிணுங்குதல், மூச்சைப் பிடித்துக்கொள்ளுதல், உதைத்தல், அடித்தல் போன்றவற்றில் ஈடுபடுவார்கள். இந்த நடத்தையைக் கண்டு பெற்றோர் கோபம், இயலாமை அல்லது சங்கட உணர்வுக்கு ஆளாவார்கள். சுயகட்டுப்பாட்டைக் குழந்தைக் கற்கும் நேரத்தில் இத்தகைய அடம்பிடிக்கும் நடத்தை (temper tantrums) இயல்பானது. உண்மையில் 1-3 வயதில் எல்லா குழந்தைகளும் இப்படிச் செய்வதுண்டு. பொதுவாக 4 வயதில் அடம்பிடித்தல் நிற்கும்.
இதற்குக் காரணம் என்ன?

அடம்பிடித்தல் உடல்ரீதியாகவோ அல்லது பரம்பரையாக வருவதோ அல்ல; அதிக செல்லம் கொடுத்து அல்லது தன் இஷ்டப்படி நடந்துகொள்ள விடப்பட்ட குழந்தைகளிடம்தான் இப்பழக்கம் அதிகம் காணப்படும். சில சமயங்களில் குழந்தையுடன் விளையாட நேரம் இல்லாத பெற்றோர், அதை சரிக்கட்ட விளையாட்டுப் பொருட்களையும், பரிசுகளையும் தருவார்கள். குறிப்பாக ஒரே குழந்தை இருக்கும் குடும்பங்களில் இது இன்னும் பொருந்தும். குழந்தை மனம் கலங்கி இருக்கும்போது தன் உணர்ச்சிகளை வெளியிட அடம்பிடிப்பதும் ஒரு வழியாகும்.
இதர காரணங்கள்:
* அடம்பிடிப்பதன் மூலம் கவனத்தை இழுக்க முயற்சி செய்தல்.
* பெற்றோர் என்ன சொல்கிறார்கள் அல்லது கேட்கிறார்கள் என்று புரியாததால் குழப்பம்.
* தான் சொல்வதை மற்றவர்கள் புரிந்துகொள்ளாத போது.
* தன் உணர்வுகள் மற்றும் தேவைகளைச் சொல்ல வார்த்தை கிடைக்காதபோது.
* உடல் நலமின்மை அல்லது இதர உடல்ரீதியான பிரச்சினைகளால் தன் உணர்வுகளை வெளிப்படுத்த முடியாதபோது.
* பசி இருக்கும். ஆனால் அது பசிதான் என்று அறியாதபோது.
* களைப்பு அல்லது போதிய உறக்கம் இல்லாதபோது.
* பதற்றமும் அசௌகரியமும் இருக்கும்போது.
* நடத்தல், ஓடுதல், படிகளில் அல்லது நாற்காலியில் ஏறுதல் இறங்குதல், வரைதல், விளையாட்டுப் பொருட்களை இயங்கச் செய்தல் போன்ற வேலைகளை இன்னும் செய்ய முடியாதபோது.
* தான் செய்ய விரும்புவதைச் செய்ய அனுமதிக்கப்படாத போது எரிச்சல் அடைதல்.
இத்தகைய அடம் பிடிக்கும் செயல்களை எவ்வாறு தடுக்கலாம்?
* தாம் நம்பக்கூடிய நபர்களிடம்தான் தமது உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியும் என்று பொதுவாக குழந்தைகள் நினைப்பதால், தம் பெற்றோரிடம்தான் அதிகமாக அடம் பிடிப்பார்கள். கீழ்க்கண்ட குறிப்புகள் அடம்பிடிக்கும் பழக்கத்தைக் குறைக்க உதவும்.
* நியாயமான எல்லைகளை நிர்ணயுங்கள். குழந்தைகள் குறைபாடே இல்லாதவராக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டாம். உங்கள் விதிகளுக்கான காரணங்களை எளிமையாகக் கூறுங்கள்; அந்த விதிகளை மாற்றாதீர்கள்.
* இயன்றவரையில் தினசரி வழக்கங்களை முடிவு செய்து வைத்திருங்கள். இதனால் எதை எதிர்பார்க்கலாம் என்று குழந்தைக்குத் தெரியும்.
* குழந்தைக்கு எரிச்சலூட்டும் சூழ்நிலைகளைத் தவிர்க்கவும். உதாரணமாக, குழந்தையின் திறமைக்கும் மேற்பட்ட விளையாட்டு பொருள்களைத் தருவது அல்லது பெரிய குழந்தைகளிடம் விளையாட விடுவது.
* குழந்தை அதிகநேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருக்க வேண்டிய, அல்லது விளையாட முடியாத இடங்களுக்கு பொழுதுபோக்குக்காகச் செல்வதைத் தவிர்க்கவும்.
* உடலளவில் குழந்தையின் தேவைகளைப் பூர்த்தி செய்யுங்கள். போதிய கவனம் செலுத்துங்கள்.
* மன அழுத்தம் தரக்கூடிய வேலைக்கு அல்லது அதிக செயல்பாடு இருக்கும் தினத்திற்கு முன்தினம் குழந்தைக்குப் போதிய ஓய்வு கிடைப்பதை உறுதி செய்யுங்கள்.
* அடம்பிடிக்க வழி செய்யும் செயல்களிலிருந்து கவனத்தை திசை திருப்புங்கள். வேறு செயல்பாடுகளை அறிமுகப்படுத்துங்கள். குழந்தை இருக்கும் இடத்தை மாற்றுதல் போன்ற சிறிய மாற்றம்கூட சில நேரங்களில் கவனத்தைத் திருப்பி அடம்பிடித்தலைத் தடுக்கும்.
* நல்ல முன்மாதிரிகளைக் காட்டுங்கள். குழந்தையின் முன்னிலையில், விவாதம் செய்தல், கத்துதல் போன்றவற்றைத் தவிர்க்கவும். உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொள்வதில் குழந்தைக்கு எடுத்துக்காட்டாக இருங்கள்.
* அளவுக்கதிக எதிர்பார்ப்புகள் அல்லது கட்டுப்பாடுகளைத் தவிர்க்கவும்.
அடம்பிடித்தலைச் சமாளித்தல்:
குழந்தை எப்போது அடம்பிடிக்கும் என்பதை சில சமயங்களில் பெற்றோரால் சொல்ல முடியும். குழந்தை மனம்வெதும்பியோ, எரிச்சலடைந்தோ, அல்லது பிடிவாதமாகவோ இருக்கும். அவன் அழத் தொடங்கலாம். காலை உதைத்து அழலாம். தரையில் விழுந்து அல்லது மூச்சைப் பிடித்துக் கொண்டு அழத் தொடங்கலாம். சில சமயங்களில் தெளிவான எந்தக் காரணமும் இல்லாமல் திடீரென அடம்பிடிக்கலாம். குழந்தை அடம்பிடிக்கும் போது கீழ்கண்ட ஆலோசனைகளில் ஒன்றைப் பின்பற்றுவது குழந்தைக்கும் பெற்றோர்க்கும் உதவக்கூடும்.
1. குழந்தையின் கவனத்தை வேறு பக்கம் திருப்புங்கள் - உதாரணமாக, புதிய செயல்பாடு, புத்தகம் அல்லது விளையாட்டுப் பொருளுக்குத் திருப்பவும். சில சமயங்களில் குழந்தையைத் தொட்டுத் தட்டிக் கொடுத்தாலே குழந்தை அமைதியாகி விடும். நீங்கள் மென்மையாக குழந்தையை அணைத்து கட்டுப்படுத்த வேண்டும். வெளியே நாய் இருக்கிறது பார் என்பது போன்று ஏதாவது பேசி கவனத்தைத் திருப்பலாம். நகைச்சுவை அல்லது சிரிப்பூட்டும் வகையில் முகத்தைக் காட்டுதல் உதவலாம்.
2. அமைதியாக இருங்கள். நீங்கள் கோபப்பட்டால், அல்லது கத்தினால் நிலைமை இன்னும் மோசமாகும். அவனுடைய நடத்தைக்கு எவ்வளவு கவனம் தருகிறீர்களோ அவ்வளவு முறை அடம்பிடித்தல் திரும்பவும் ஏற்படும் என்பதை நினைவில் வைக்கவும்.
3, அழுவது, கத்துவது அல்லது உதைப்பது போன்ற சிறிய அளவிலான கோப வெளிப்பாடுகளைப் பொருட்படுத்த வேண்டாம். அவன் அமைதியடையும் வரை எதையும் பேசாமல் பக்கத்திலேயே இருங்கள்.
4. சிலவிதமான அடம்பிடிக்கும் செயல்களை பொருட்படுத்தாமல் விடக்கூடாது. பின்வரும் நடத்தையை புறக்கணிப்பதோ, ஏற்பதோ கூடவே கூடாது.
பெற்றோரை அல்லது மற்றவர்களை அடிப்பது அல்லது உதைப்பது.
அபாயகரமான முறையில் பொருட்களைத் தூக்கி எறிவது.
தொடர்ந்து கத்துவது அல்லது கூச்சல் போடுவது.
5. உங்களால் அமைதியாக இருக்க முடியவில்லை என்றால் அறையை விட்டுச் செல்லவும். சில நிமிடங்கள் வரை, அல்லது அழுகை நிற்கும் வரை காத்திருந்து பிறகு உள்ளே போகவும். அதன்பின் வேறு வேலையில் குழந்தையின் கவனத்தைத் திருப்பவும். புரிந்துகொள்ளக்கூடிய அளவுக்கு குழந்தைக்கு முதிர்ச்சி இருந்தால் என்ன நடந்தது என்பதைப் பற்றியும் அடுத்த முறை அதை எவ்வாறு கையாள முடியும் என்பதைப் பற்றியும் பேசுங்கள்.
அடம்பிடிப்பதற்காக குழந்தையை எப்போதும் தண்டிக்கக்கூடாது. அதனால் குழந்தை தன் கோபத்தையும் எரிச்சலையும் உள்ளேயே அடக்கி வைத்திருக்கும். அது நல்லது அல்ல. நீங்கள் அமைதியாகவும், புரிதலுடனும் அடத்தைக் கையாள வேண்டும்.
அடம் பிடிப்பதை நிறுத்தியதற்காக பரிசு ஏதும் தரவேண்டாம். அடம்பிடித்தால் வெகுமதி கிடைக்கும் என்ற எண்ணம் குழந்தைக்கு ஏற்பட்டு விடும். அடம்பிடிப்பதால் எதுவும் கிடைக்காது என்று தெரிந்தால், அப்பழக்கம் தொடர்வது குறையக்கூடும்.
அழுகை தீவிரமாகவும் அடிக்கடியும் ஏற்பட்டால் அது உணர்வுரீதியான பிரச்சினையின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். அடம் பிடிக்கும்போது குழந்தை தனக்குத் தானே அல்லது மற்றவர்க்கு தீங்கு ஏற்படுத்தி விட்டால் - உதாரணமாக மூச்சைப் பிடித்துக்கொண்டு மயங்குதல் அல்லது 4 வயதில் அடம் மிகவும் மோசமானால் - குழந்தை நல மருத்துவரிடம் பேசவும். இந்த அடத்திற்கு உடல்ரீதியாகவோ மனரீதியாகவோ ஏதாவது காரணமும் உள்ளதா என்பதை குழந்தை நல மருத்துவர் கூறுவார். அதைக் கையாள நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்ற ஆலோசனையையும் தருவார்.
குழந்தையின் வளர்ச்சியில் அடம்பிடிப்பதும் இயற்கையான பகுதிதான் என்பதை உணரவேண்டும். அடம்பிடிக்கும் குழந்தையைக் கையாளுவது எளிதல்லதான். ஆனால் அன்பு, புரிதல் மற்றும் மாறாமல் காட்டும் கவனம் இந்த வளர்ச்சிக் கட்டத்தைக் கடந்து செல்ல குழந்தைக்கு உதவும்.

கருத்துகள்