சுறுசுறுப்பாக இருந்தால் தூக்கம் வரும் தன்னாலே...

சுறுசுறுப்பாக இருந்தால் தூக்கம் வரும் தன்னாலே...
ஒருவருக்கு வாழ்க்கையில் நிம்மதி இல்லை என்றால் தூக்கம் தொலைந்துபோகும் என்பார்கள். இது ஒருபுறம் இருக்க சுறுசுறுப்பாக இல்லாவிட்டாலும் தூக்கம் வராது என்று கண்டுபிடித்து இருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும், ஆக்லாண்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டார்கள். இவர்கள் 1996 மற்றும் 1997க்கு இடையில் பிறந்த 519 பேரை தங்களது ஆய்வுக்கு உட்படுத்தினர். அவர்களது அன்றாட நடவடிக்கைகளை தீவிரமாக ஆராய்ந்தார்கள்.
ஆராய்ச்சியின் மூலம் தெரிய வந்த தகவல்கள் குறித்து அவர்கள் கூறியதாவது:
"பொதுவாக பெரும்பாலான குழந்தைகள் 40 நிமிடங்களுக்குள் தூங்குகிறார்கள். சராசரியாக 26 நிமிடங்களுக்குள்
தூங்கிவிடுகிறார்கள். அதேநேரம், எப்போதும் சுறுசுறுப்பாக காணப்படும் குழந்தைகள் இந்த கால அளவைவிடவும் குறைவாக வெகு விரைவிலேயே தூங்கி விடுகிறார்கள்.
இப்படி, படுத்த உடனேயே தூங்கிவிடுகிற சுறுசுறுப்பான குழந்தைகளை நாங்கள் தனியாக ஆராய்ந்தோம். அப்போது, அவர்கள் உடற்பயிற்சியை தவறாமல் செய்வதும் எங்களுக்கு தெரிய வந்தது. இவர்கள், படுக்கையில் வெகு விரைவிலேயே தூங்குவதோடு சராசரி தூக்க அளவான 8 மணி நேரம் நன்றாக ஆழ்ந்தும் தூங்குகிறார்கள். இதுவும் அவர்களுக்கு சுறுசுறுப்பைத் தருகிறது" என்று கூறினர் ஆராய்ச்சியாளர்கள்.
மேலும், இந்த ஆராய்ச்சியின் மூலம் இன்னொரு தகவலும் கண்டுபிடிக்கப்பட்டது.
பல வீடுகளில் பெற்றோர் இரவில் நீண்டநேரம் கண் விழித்திருக்கிறார்கள். ஒன்று டி.வி. பார்க்கிறார்கள். அல்லது, கம்ப்யூட்டரில் வேலை செய்கிறார்கள். இவர்களது இந்த செய்கைகளும் குழந்தைகளின் தூக்கத்தை பாதிக்கின்றன.
அத்துடன், குழந்தைகளும் இரவு 9 மணிக்கு பின்னரும் டி.வி. பார்ப்பதையும் காண முடிகிறது. அவ்வாறு, இரவில் நீண்ட நேரம் வரை டி.வி. பார்ப்பதும் அவர்களது தூக்கத்தை பாதிக்கிறது என்பது பொதுவான கருத்து. ஆனால், சுறுசுறுப்பாக செயல்படும் குழந்தைகள் இரவு 9 மணிக்கு பின்னரும் டி.வி. பார்த்தாலும் சட்டென்று தூங்கி விடுகிறார்களாம்.
இந்த தகவலை வெளியிட்டுள்ள ஆராய்ச்சியாளர்கள், குழந்தைகளை சுறுசுறுப்பாக வளர்க்கும்படியும் பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.

கருத்துகள்