கூச்சப்படும் குழந்தைகள்

கூச்சப்படும் குழந்தைகள்
கூச்ச சுபாவம் ஒரு தடை. ஆணோ, பெண்ணோ கூச்ச சுபாவத்தின் காரணமாக வாழ்க்கையில் பெருத்த முன்னேற்றத்தை அடைய முடியாதவர்களாகி விடுகிறார்கள்.
கூச்சம் உள்ள குழந்தையை எப்படி அடையாளம் காண்பது? தேர்வில் குறைந்த மதிப்பெண் பெறும். எந்தப் பொழுதுபோக்கிலும் ஈடுபாடு இல்லாமல் இருக்கும். வளரும் பருவத்திற்கேற்ற கொடுத்து வாங்கும் பழக்கம் இருக்காது. வளரும் பருவத்தில் சமூகத்துடன் கலந்து பழகாமல் ஒதுங்கியே இருந்துவிடும். கூச்ச சுபாவம் உள்ளவர் (ஆணாயினும், பெண்ணாயினும்) ஒன்று தாமதமாகவோ அல்லது முன்கூட்டியோ மணம் செய்துகொள்கிறார். அரிதாக சிலர் திருமணமே வேண்டாம் என்று இருந்துவிடுவது உண்டு.
சிலர் வேலை தேடும்போது பொறுப்பு அதிகம் இல்லாத வேலையாக தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். சிலர், தங்களுடைய மனக்குறையை போதை மருந்துகளில் மறக்கப் பார்ப்பார்கள்.

குழந்தையின் கூச்ச சுபாவத்தை அகற்ற மனவியல் நிபுணரின் ஆலோசனையும், பெற்றோரின் பரிவும் தேவைப்படும்.
பத்துக் குழந்தைகளில் நான்கு பேர் கூச்ச சுபாவம் உள்ளவர்களாக இருப்பார்கள். நம்முடைய கண்ணுக்கு ஒன்றிரண்டு பேர்தான் அப்படி தெரிவார்கள். மனவியல் நிபுணர் மேலும் இருவர் அல்லது மூவரை அடையாளம் காண்பார். பிலிப் ஜிம்பார்டோ, மனவியல் நூல்கள் எழுதிப் புகழ் பெற்றவர். Shyness : What it is, what to do about it, என்ற தனது நூலில் குழந்தைகளின் வயதுக்கேற்ப கூச்சத்தின் அளவு வேறுபடும், எட்டாம் வகுப்புப் பையன்களில் அரைவாசி பேரும், பெண்களில் அறுபது சதவிகிதத்தினரும் கூச்சம் நிரம்பியவர்கள், என்று குறிப்பிடுகிறார்.
பெரும்பாலும் ஆசிரியர்களும் சரி, பெற்றோரும் சரி குழந்தைகளின் சுபாவத்தில் கவனம் செலுத்துவதில்லை. ஒரு குழந்தை வகுப்பு விவாதங்களில் கலந்து கொள்ளாமல் இருப்பதையும், இன்னொரு குழந்தை விளையாட்டு மைதானத்தில் ஒதுங்பியே நிற்பதையும் அவர்கள் காணத் தவறிவிடுகிறார்கள். சிரித்துக் கைதட்ட வேண்டிய சந்தர்ப்பங்களில் கூச்ச சுபாவம் கைதட்ட வேண்டிய சந்தர்ப்பங்களில் கூச்ச சுபாவம் உள்ள குழந்தைகள் சிரிப்பது போலவும், கை தட்டுவது போலவும் பாவனைதான் செய்யும். சில குழந்தைகள் தங்களுடைய கூச்ச சுபாவத்தை மறைக்கிற முயற்சியாய் உரக்கப் பேசும், மற்ற குழந்தைகளை சீண்டிப் பார்க்கும். வளர்ந்த நிலையில் அசட்டுத் துணிச்சலுடன் தத்துப்பித்தென்று எதையாவது செய்து வைக்கும்.
என் பிள்ளைக்கு அதெல்லாம் பிடிக்காது. அங்கெல்லாம் போகமாட்டான் என்று பெருமைப்பட்டுக் கொள்கிற விதமாய் தங்கள் குழந்தைகளைப் பற்றி பேசுகிற தாய்மார்கள் உண்டு. அவர்களுடைய பேச்சு தெரிந்தோ, தெரியாமலோ அந்தக் குழந்தைகளின் கூச்சத்தை மேலும் அதிகப்படுத்திவிடும். நான் குறைபாடுள்ளவன் என்று தன்னைப்பற்றி குழந்தை முடிவு கட்டிக்கொள்ளும்.
நீ அசாத்திய குண்டு! இந்த ட்ரஸ் உனக்குப் பொருந்தாதுடி என்று அம்மாக்காரியே சொல்லிவிட்டால் குழந்தையின் மனநிலை கண்டிப்பாக பாதிக்கப்படும். பத்து பேர் நடுவே இருந்தாலும் தான் மட்டும் தனித்து விடப்பட்ட உணர்வையே அது அடையும்.
கூச்சமான குழந்தைகளை மற்றவர்கள் விமர்சிக்க வேண்டும் என்பதில்லை. அவர்கள் எப்போதுமே சுய விமர்சனம் செய்து கொள்கிறார்கள். அது அவர்களை மேலும் மோசமாக்கிவிடுகிறது என்பது உண்மை.
உங்களுடைய இரண்டு மூன்று குழந்தைகளில் ஒன்று கூச்சத்துடன் அதிகம் பேசாமல் இருக்கலாம். ஆமா, அந்த உம்மணாம் மூஞ்சியிடம் கேட்டு என்ன ஆகப்போகிறது, என்று அலட்சியப்படுத்திவிடாதீர்கள். இதில் உன்னோட கருத்து என்ன, இதற்கு என்ன செய்யலாம்? என்று எல்லாவற்றிலும் அந்தக் குழந்தையின் கருத்தைக் கேளுங்கள். நிறைய பேசும்படி தூண்டுங்கள்.
நம் அண்ணனுக்கோ, அக்காவுக்கோ நாம் எந்த விதத்திலும் குறைந்துவிடவில்லை என்ற உணர்வை அது பெறும். பேச்சில் முழு ஈடுபாடு கொள்ளும். கூச்சத்தை விடும். தன்னம்பிக்கையோடு செயல்படும்.
பொதுவாகவே, கூச்ச சுபாவம் உள்ள குழந்தைகள் மோசமான சுயமதிப்பீடு (Self Valuation) கொண்டிருக்கும். தன்னை யாராவது தாங்கி நிறுத்தமாட்டார்களா என்று எதிர்பார்க்கும்.
குழந்தையின் கூச்சம் வெளிப்படுகிற இடம் அதன் வகுப்பறைதான். அங்கேதான் அந்தக் குறை திருத்தப்பட வேண்டியதும், ஆசிரியர்களின் கவனம் பெரும்பாலும் குறும்புக்கார பிள்ளைகள் செய்யும் விஷமங்களைக் கண்டு பிடிப்பதிலேயே இருக்கும் அல்லது புத்திசாலிப் பையனை மேலும் புத்திசாலி ஆக்குவதில் இருக்கும். கூட்டுப்புழுவான உங்கள் குழந்தையை வெளியே கொண்டுவருவதில் ஆசிரியரின் உதவியை வேண்டிப் பெறுங்கள்.
குழந்தையின் கூச்சத்தை எப்படிப் போக்குவது? அது ஆசிரியருக்குத் தெரியும். உங்கள் பையனுக்கு எந்தப் பாடத்தில் ஆர்வம் அதிகம் என்பதை அவர் கண்டறிவார். அவனுக்கு கணிதம் விருப்பமானது என்று வைத்துக் கொள்வோம். வா, இந்தக் கணக்கை எப்படி செய்வது என்று பிளாக் போர்டில் நீயே போட்டுக் காண்பி. உன் ஃப்ரண்ட்ஸ் புரிஞ்சிக்கட்டும், என்பார் ஆசிரியர். பையன் தயக்கத்தை விடுத்து கரும் பலகையில் கணக்கைப் போடுவான். ஆசிரியர் ஊக்குவித்தால், அதை உற்சாகத்துடன் சக மாணவர்களுக்கு விளக்கவும் முற்படுவான்.
கூச்சமுள்ள குழந்தைக்கு, கடைக்குப் போய் வா, போனை அட்டண்ட் பண்ணு என்று சின்னச் சின்னதாய் வேலை கொடுக்க வேண்டும்.
வளர்ந்த குழந்தையின் கூச்ச சுபாவத்தைப் போக்க தன்னைவிட சிறு பையன்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கலாம். தன் வயதொத்தவர்களுடன் இணைந்து பழக யூத் க்ளப் (youth club) எதிலாவது உறுப்பினராக்கிவிடலாம். மேடையேறி சின்னச் சின்ன நாடகங்களில் நடிக்கும்படி தூண்டலாம். பள்ளிக் கூடங்களுக்கிடையே நடத்தப் பெறும் பேச்சுப் போட்டி, விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளும்படி உற்சாகப்படுத்தலாம்.
உங்கள் குழந்தை வாழ்க்கையில் முழுமையை உணர்ந்து மகிழ்ச்சியோடு அனுபவிக்க நீங்கள்தான் உதவ வேண்டும். அவர்களுக்காக முயல்வது உங்கள் கடமை. எந்த முயற்சியும் ஒரே நாளில் பலனைக் கொடுத்து விடாது. பொறுமையோடு உழையுங்கள், பிரமிக்கத்தக்க ரிஸல்ட் கிடைக்கும். எத்தனையோ குழந்தைகள் வளரும் பருவத்தில் கூச்சத்தை உதறிவிட்டிருக்கிறார்கள். உங்கள் குழந்தையாலும் அது முடியும்.

கருத்துகள்