குழந்தைகளின் மனநிலை

குழந்தைகளின் மனநிலை
சார் நல்ல மூட்ல (Mood) இருக்காரா காரியம் சாதித்துக் கொள்ள வந்தவர் கேட்பார்.
உங்க ஃபைல்ல இப்போ கை எழுத்து போடற மூடில் அவர் இல்லை உயர் அதிகாரி பற்றி கடைநிலை ஊழியர் சொல்வார்.
ப்சு .. படிக்கிற மூடே இல்லை புத்தகத்தை வீசி எறிந்துவிட்டு வெளியில் புறப்படுவான் கல்லூரி மாணவன்.

ம் ... கல்யாணத்தைப் பத்தி பேசலாம்னு பார்த்தா அவன் மூடில் இருந்தால்தானே அம்மாக்காரி முணகுவாள்.
இவர்கள் குறிப்பிடுகிற அந்த மூட் மனநிலையன்றி வேறில்லை. மனநிலை சரியாக இருந்தால்தான் காரியம் பண்ண, படிக்க, பேச முடியும். இந்த மனநிலை முக்கியத்துவம் பெரியவர்களுக்கு மட்டும்தானா? குழந்தைகளுக்குக் கிடையாதா? உண்டு.
குழந்தை என்றால் களிமண் அல்ல, நீங்கள் விரும்பிய விதத்தில் வடிவமைத்துக் கொள்வதற்கு. நம் குழந்தைதானே நாம் சொன்னதைக் கேட்கும். நாம் விரும்பிய விதத்தில் வளர்ப்போம் என்று எண்ணிவிடக் கூடாது. குழந்தைகளுக்கும் மனம் உண்டு. பெரியவர்களைப் போல் அவர்களுக்கும் மனநிலை அவ்வப்போது மாறும். தங்களை சரியான விதத்தில் நடத்த வேண்டும் என்று ஓர் எதிர்பார்ப்பு அவர்களுக்குள் இருக்கும். அதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.
பொதுவாக, குழந்தை எப்படி என்பது அதன் பெற்றோருக்குத் தெரிந்திருக்கும். தங்கள் உள்ளுணர்வு மூலமும், குழந்தையிடம் நெருக்கம் இருப்பதாலும் அறிந்துகொள்ள முடியும். குழந்தையின் மனநிலையை சரியாகத் தீர்மானிக்கக் கூடியவள் தாய்தான்.
குழந்தை மகிழ்ச்சியாக இருக்கும்போது அதை அப்படியே விட்டுவைக்க வேண்டும். உதாரணமாக தனக்குப் பிடித்தமான பொம்மையை வைத்து அது விளையாடிக் கொண்டு இருக்கும்போது வா, குளிக்க என்று இழுக்கக் கூடாது.
குளியலில் விருப்பம் உள்ள குழந்தைகூட அப்போது முரண்டு பண்ணும். குழந்தைக்கு அந்த பொம்மையிடம் சலிப்பு ஏற்பட்டு விளையாட்டை நிறுத்திய பிறகுதான் கொஞ்சம் கொஞ்சமாக அதன் மனநிலையை பாத்ரூம் பக்கம் திருப்ப வேண்டும்.
குளிக்கும்போது தண்ணீரை வாரி இறைத்து விளையாடினால் தடுக்காதீர்கள். எதையும் அனுபவித்து மகிழும் மனநிலை குழந்தையுடையது.
குழந்தை தனது மனோபாவத்தை சட்டென்று மாற்றிக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். எதற்கும் கட்டாயப்படுத்தாதீர்கள். சுபாவத்தில் பெரியவர்களைப் போல் அத்தனை திடமனம் கிடையாது குழந்தைகளுக்கு. அவர்களைத் தொந்தரவு செய்யாமல் இருந்தால் எரிச்சலூட்டுகிற, மகிழ்ச்சியற்ற மனநிலையில் இருந்து சீக்கிரமே விடுபடுவார்கள். குழந்தை, பெரியவர்கள் மாதிரி கடுமையான அளவு சோர்ந்து விடுவதில்லை.
குழந்தை வழக்கத்தைவிட நீண்ட நேரம் ஒரே மனநிலையில் இருப்பதாக உங்களுக்குத் தோன்றினால் அதன் மனதை வேறு வழியில் திருப்ப முயலலாம். ஒரு பூங்காவிற்கு அழைத்துப் போகலாம் அல்லது அதற்கு விருப்பமான கதை சொல்லலாம்.
குழந்தை தனது நேரத்தை எப்படி செலவழிக்க வேண்டும் என்று நாம் கால அட்டவணை போடுவதற்கில்லை. நீங்கள் சோறூட்ட விரும்பும்போது குழந்தைக்கு பசி எடுக்க வேண்டும் என்றோ, அதைத் தூங்க வைக்க நீங்கள் விரும்புகிறபோது அதற்கு தூக்கம் வரவேண்டும் என்றோ எதிர்பார்க்கக் கூடாது.
குழந்தையின் மனநிலை மாறிக்கொண்டே இருக்கும். அது விரும்பியபோது தூங்கும். சில நாள்கள் தொடர்ந்து மதியம் ஒரு மணிவாக்கில் தூங்குகிற குழந்தை, ஒருநாள் அந்த நேரத்தில் விளையாடும். நீங்கள் நினைக்காத கணத்தில் சிரித்து வைக்கும். சில நேரங்களில் குழந்தையை சிரிக்க வைக்கிற உங்கள் முயற்சி கொஞ்சமும் எடுபடாது. 1-4 வயதுக் கட்டத்தில் உள்ள குழந்தைகளின் மனநிலை அப்படித்தான்.
5 - 12 வயதுப் பிள்ளைகளுக்கு படிப்பைவிட விளையாட்டு முக்கியமாகப்படும். காரணம், அவர்கள் நாளின் பெரும்பகுதியை வகுப்பறையில் கழிக்கிறார்கள். வெளியில் வந்ததும், அப்பாடா என்றாகிவிடுகிறது. விளையாட்டில்தான் அவர்களுடைய மனநிலை சீரடைகிறது.
குழந்தைகள் நீண்ட நேரம் படிக்க வேண்டி இருக்கிறது. அந்த அளவுக்குப் புத்தகங்கள், அதன் விளைவாக அவர்களுடைய மனநிலை பாதிக்கப்படுகிறது. சாந்தத்திற்கு பதில் எரிச்சலும், சந்தோஷதூதிற்கு பதில் வருத்தமும் கொண்டு வடிகிறார்கள்.
ஸ்கூல் விட்டு வந்ததுமே குழந்தையை ஹோம் ஒர்க் பண்ணு. ட்யூஷனுக்கு புறப்படு என்று அதட்டி மிரட்டும் அம்மாக்களைப் பார்க்கிறோம். ஐந்து மணியில் இருந்து ஏழு மணி வரை குழந்தை அவ்விதம் முடக்கிப் போடப்படுவதால், அது விளையாட வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. அந்நிலையில் குழந்தை நீங்கள் விரும்பிய விதத்தில் இயங்க வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? கொஞ்ச நேரமாவது தோட்டத்தில் சுற்றித்திரியவோ, விளையாடவோ அனுமதிக்க வேண்டும். அதன் பிறகுதான் ஹோம் ஒர்க்கிற்கோ, ட்யூஷனுக்கோ அதனுடைய மனநிலை ஒத்துப்போகும்.
ஒவ்வொரு குழந்தைக்கும் ஏதாவது ஒரு பொழுதுபோக்கு இருக்கும். அது தன்னுடைய திறமையை எந்தத் துறையில் வெளிப்படுத்த விரும்புகிறது என்பதைக் கண்டறிய வேண்டும். குழந்தையின் திறனை மேம்படுத்துவது பெற்றோர் பொறுப்பு. ஒரு குறிப்பிட்ட பொழுதுபோக்கில் குழந்தைக்கு ஆர்வம் இருக்கலாம். அதில் ஈடுபட்டிருக்கும்போது எந்தக் குறுக்கீட்டையும் அது விரும்பாது. உதாரணமாக, உங்கள் குழந்தை ஓவியம் வரைவதில் முனைப்பாயிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இடையில் நீங்கள் புகுந்து, படிச்சு உருப்பட்டாய்பலதான் என்று ப்ரஷ்ஷை பிடுங்கிப்போட்டால் அதற்கு எப்படி இருக்கும்? படிப்பைவிட எதுவுமே முக்கியம் இல்லை என்று குழந்தைக்கு உணர்த்துவது உங்கள் நோக்கமாக இருக்கும். குழந்தையின் ஓவியத் திறனோ முளையிலேயே கருகிப்போகும்.
படிப்பைப் போலவே கலைகளிலும், விளையாட்டிலும் குழந்தையை ஊக்குவியுங்கள். அதற்காக, உங்களுக்கு விருப்பமான நடனத்தை, உங்கள் பெண்ணும் விரும்பவேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். அவளுக்கு பாட்டு பிடித்தமானதாயிருக்கலாம்.
வீட்டில் அன்பும், பரிவும் கிடைத்தால் குழந்தைகள் ஏன் மோசமான மனநிலைக்கு தள்ளப்படுகிறது? எண்ணிப் பாருங்கள். அவர்களுடைய மனநிலையை நல்லவிதமாகப் பராமரிப்பது உங்கள் பொறுப்பு.

கருத்துகள்